புத்தனாவது சுலபம் என்றால், எவ்வளவு சுலபம் என்ற அடுத்த கேள்வி வந்துவிடும். எனவே கேள்விக்கு இடமளிக்காமல், ஒரு விநாடியில் புத்தனாகலாம் என உணர்த்துகிறது “ஒரு விநாடி புத்தர்” என்ற இந்தப் புத்தகம். வாழ்க்கையின் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிய சத்குருவின் ஞானக் கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த புத்தகத்தின் மதிப்புரை இது…

இந்த அரிய நூலில் அடங்கியிருக்கும் 27 கட்டுரைகளும் ஈஷா காட்டுப்பூ இதழில் வெளிவந்து அனைவரின் மகத்தான பாராட்டுகளைப் பெற்றவை. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவை தொகுக்கப்பட்டு 180க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது. உங்கள் வாழ்க்கையில் பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த நூலில் விடைகள் உள்ளன.

குழந்தைகளை வளர்ப்பதில் எது சரி, எது தவறு என்று தடுமாறும் பெற்றோர்களுக்காக ‘குழந்தைகள் வளரட்டும் குதூகலமாக’, வாழ்க்கையில் உறவுகள் அவசியம்தானா என்னும் உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் ‘உறவுகள் வேண்டுமா உங்களுக்கு’, உங்கள் தோல்விகளுக்கெல்லாம், ‘இதுதான் என் கர்மா போல’ என்று அங்கலாய்ப்பவர்களுக்காக ‘கர்மவினை மீது பழி போடாதீர்கள்’, ஆன்மீகக் கலாச்சாரத்தை விளக்கும் ‘விரதங்கள் அவசியமா’ மரணம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதை விளக்கும் ‘மரணம் என்றொரு மாயை’, புத்தரின் வாழ்க்கையில் அந்த ஒரு வினாடியில் நடந்த மகத்துவத்தைக் கூறும் ‘ஒரு விநாடி மகத்துவம்’ என்று இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் அனைத்துக் கட்டுரைகளும் உங்கள் வாழ்க்கைக்கான ஒரு டிக்ஷனரியாகவே உள்ளன.

இந்தக் கட்டுரைகளை எழுத்தாக்கம் செய்த மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால், “வாழ்வின் திசைகளை விளங்கிக் கொண்டுவிட்டதாய் உள்ளம் கொள்ளும் கர்வத்தின் மீது கல்லெறிகின்றன சத்குருவின் சிந்தனைகள். அடர்ந்த இருளைக் கட்டுடைக்கும் கதிரொளியாய் புலர்கின்றன அவரின் புதிய பார்வைகள். இவை, பிரபஞ்சத்தைத் தன்னுள் கண்ட பிரம்மாண்டம், பரிவுடன் உணர்த்தும் பாடங்கள். இந்த வாழ்க்கையில் கடக்க வேண்டிய தூரம், இலக்கு, இருக்கும் திசை, பயணத்துக்கு அப்பாலும் பதுங்கிக்கிடக்கும் பேருண்மை ஆகிய அனைத்தையும் அறிவிக்கும் சிந்தனைப் பேழைகள்,” என்கிறார்.

ஆசிரியர்: சத்குரு
பக்கம்: 184