உரைச் சிறப்பு
இந்த உரையின் சிறப்புகளை இந்த உரைநூலுக்கு எழுதப்பட்டுள்ள சிறப்புப் பாயிரம் தெளிவுபடுத்துகிறது.[2]
- ஒன்பது உரைகளுக்குப் பின்னர் பத்தாவதாக எழுந்த உரை இது
- வள்ளுவனே மீண்டும் பிறந்து வந்து தன் கருத்தினை வெளிப்படுத்தியது போல் உள்ளது.[3]
- பொழிப்புரையாகவும், அகல-உரையாகவும் உள்ளது. நுட்பமான விழுமிய பொருள்களும், சொல்லாமல் புலப்படுத்திய எஞ்சிய விழுமிய பொருள்களும் தோன்றுமாறு எழுதப்பட்டுள்ளது.
- பரிமேலழகர் வடமொழியையும் தென்-தமிழையும் முறையாகப் பயின்றவர். தவ முனிவர்.
உரை – எடுத்துக்காட்டு
- “இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறதருக” என்னும் அறநூல் பொதுவிதி. பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியர் ஆதலும் நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி இவ்வாறு கூறினார்.[4]
பரிமேலழகர் உரை சிறப்படையக் காரணங்கள்
திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு. அந்தப் பத்து உரைகளில் காலத்தால் முற்பட்டது மணக்குடவர் உரை என்றும் அது 10ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது என்றும் அறிஞர் கூறுவர். திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் உரை வழியாகவே.
பரிமேலழகரின் உரை மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழிந்தே எழுதப்பட்டது. ஆயினும் மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.
பரிமேலழகர் உரை சிறப்படைந்ததற்கு காரணமாகக் கூறப்படுவன இவை:
- பரிமேலழகர் உரையில் மிக நுட்பமான ஆழ்ந்த புலமை விளங்குகிறது.
- பரிமேலழகர் உரை சிறப்பான உரை நுட்பம் கொண்டுள்ளது.
- பரிமேலழகர் உரையில் அரிய இலக்கண நுட்பம் பளிச்சிடுகிறது.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட திருக்குறள் உரை பழைய உரைகள் எல்லாவற்றிலும் சிறப்பானதாகக் கருதப்பட்டதில் வியப்பில்லை.
இத்தகைய இலக்கியப் பண்புகளை உள்ளடக்கிய பரிமேலழகர் உரையைத் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பதிப்பகங்கள் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளன. இதுவரை பரிமேலழகர் உரைக்கு 200க்கு மேற்பட்ட பதிப்புகள், பல வடிவங்களில் 30க்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.[5]
மேலும், பரிமேலழகர் உரைக்கு வேறு உரைகள் எழுதப்பட்டுள்ளன என்பதிலிருந்து, அந்த உரை அறிஞர்கள் நடுவிலும் மக்கள் நடுவிலும் உயரிய இடம் பெற்றுள்ளதை அறியலாம்.
தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான உரை நூல்கள் பரிமேலழகர் உரையைத் தழுவியே வெளிவந்துள்ளன என்பதும் அதன் சிறப்பினைப் புலப்படுத்தும். இந்த உரை ஒன்றுதான் மிகுதியான விளக்க உரைகளையும் உரை விளக்க உரைகளையும் தழுவல் உரைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பரிமேலழகர் உரை சிறப்புப் பெற்றமைக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் அந்த உரையே முதன்முதலாக அச்சேறியதும், அவ்வகையில் பொது மக்களைச் சென்றடைந்ததும், மீண்டும் மீண்டும் பதிப்புகள் பெற்று திருக்குறளின் செம்பதிப்புப் போல ஏற்றுக் கொள்ளப்பட்டதும் ஆகும்.
இன்றும் கூட, ஒரு குறிப்பிட்ட திருக்குறள் எந்தப் பாலில் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்), எந்த இயலில், எந்த அதிகாரத்தில், எந்த வரிசையில் வருகிறது என்பதைக் குறிப்பதற்கு, திருக்குறளுக்கு முதன்முதல் எழுதப்பட்ட மணக்குடவர் உரையில் வரும் வரிசை முறை பின்பற்றப்படவில்லை; மாறாக, பரிமேலழகரின் வரிசைமுறையே பின்பற்றப்படுகின்றது. இந்த வகையில் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற விதத்தில் ஒரு குறிப்பிட்ட குறளின் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க பரிமேலழகர் வரிசை முறையே பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பரிமேலழகர் உரை சிறப்படைய முக்கிய காரணம் ஆயிற்று.
பரிமேலழகரின் குறள் வைப்பு முறை ஆங்காங்கே சரியாக அமையவில்லை என்று குறை காண்போரும் கூட, தாம் அளிக்கின்ற புதிய வரிசை முறையை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காகப் பரிமேலழகரின் குறள் வரிசை முறையையும் இணைத்தே வழங்குகின்றனர்.
அதுபோலவே, திருக்குறளில் வருகின்ற இயல்களின் பெயர்கள் பரிமேலழகர் அமைப்பில் சரியாக அமையவில்லை என்று குறை கண்டு, அந்த இயல்களுக்குப் புதிய பெயர்கள் தருவோரும் பரிமேலழகர் தந்த பெயர்களையும் அருகே குறிக்கவே செய்கின்றனர். இவ்வாறு, பரிமேலழகரின் உரையையும் குறள் அமைப்பையும் ஒப்பிட்டு நோக்குவதற்கு வழி செய்கின்றனர்.
மேற்கூறிய அனைத்தும் பரிமேலழகரின் உரை சிறப்படைந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆகும். சிலர் “பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது” என்பதோடு, “பரிமேலழகரின்றி வள்ளுவம் இல்லை” என்றுகூடக் கூறுவதிலிருந்து (இந்திரா பார்த்தசாரதி)[6] இந்த உரை எத்துணை உயர்வாகக் கருதப்பட்டு வந்துள்ளது என்பதை நன்கு அறியலாம்.
பரிமேலழகர் உரை பற்றிய விமரிசனங்கள்
[தொகு]
1840இல் முதன்முதலாக பரிமேலழகரின் திருக்குறள் உரை அச்சேறியது. அதிலிருந்து சுமார் நூறாண்டுகளாக அந்த உரையே மீண்டும் மீண்டும் பதிக்கப்பட்டது. திருக்குறளுக்கு முதன்முதல் உரை எழுதிய மணக்குடவர் உரை முழுவதும் 1925இல் தான் முதன்முறையாக அச்சிடப்பட்டது.
பரிமேலழகர் உரையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்னும் நிலையிலிருந்து மாறி, திருக்குறளுக்கு அணுக்க உரை காண வேண்டும் என்னும் உந்துதலும் ஆய்வுலகில் இக்கால கட்டத்தில் எழுந்துள்ளது. அரசஞ்சண்முகனார் 1921இல் எழுதிய முதற்குறள் விருத்தி என்னும் நூல் இதற்குச் சான்றுபகர்கிறது.
பரிமேலழகர் உரைத்திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டோர் சிலர்; திருக்குறள் வடமொழி சார்ந்து இயற்றப்பட்ட நூலே என்ற எண்ணத்தில் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும் நோக்குடன் பரிமேலழகர்பால் பற்றுக்கொண்டோர் வேறுசிலர் என்ற நிலை 1920களில் எழுந்தது.
இப்பின்னணியில்தான் தமிழ் எழுச்சி உருவாகி, பரிமேலழகர் உரைக்கு மாற்றாக மணக்குடவர் உரையை அச்சிட்டுக் கொண்டுவர வேண்டும் என்னும் உந்துதல் எழுந்தது. செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்டார். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல் மணக்குடவர் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.
பரிமேலழகரை உயர்த்தி திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்து, அவ்வுரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்கு தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது.
Reviews
There are no reviews yet.